என்னுடைய 20களின் தொடக்கத்தில் இந்த விஷயம் எனக்குத் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்…

என்னுடைய வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், அது 25 வயதில் தான் தொடங்கியது எனலாம். அதுவரையில் ஒரு சராசரியான மனநிலையைக் கொண்ட ஒருவனாகவே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

ஆனால் அதன் பின்னர் எனக்குள் எழுந்த கேள்விகளும், அதற்கான தேடுதலும் குறுகிய காலத்திலேயே என் மனநிலையை வேறு மாதிரியாக மாற்றிவிட்டது. இன்றளவும் நான் சிலவற்றை நம்முடைய இருபதுகளின் தொடக்கத்திலேயே இதை நாம் அறிந்திருக்கலாமே அல்லது யாராவது நமக்குக் கூறி இருக்கலாமே என்று நினைப்பதுண்டு. அவை என்னவென்று பார்க்கலாம்.

  1. என் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்வது.

வாழ்க்கையின் அர்த்தம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதில் இந்த வாழ்க்கை முழுவதும் எத்தகைய செயல்களோடு எப்படி கடக்கப் போகிறேன் என்பதை அறிவது மிக முக்கியம். அதை எப்படி நான் கண்டறிவது என்று உங்களுக்குள் கேள்வி எழலாம்.

முதலில் ஏதோ ஒரு வேலையை செய்து நாம் வாழ்க்கையை கடத்தி விடலாம் என்ற மனப்பான்மையில் இருந்து வெளியே வாருங்கள். நாம் அனைவருக்குள்ளும் ஒரு திறமைசாலி ஒளிந்து கிடக்கிறான். ஒரு சில விஷயங்களை நாம் செய்யும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். எந்த சலனமும் இன்றி வெகுநேரம் அந்த செயலை செய்வது நமக்கு விரக்தியை ஏற்படுத்தாது.

அதுவே உங்களுக்கான தர்மா. தர்மா என்றால் உங்களுக்குப் பிடித்தமான செயல் என்பதாகும். இது போன்று, உங்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படுத்தும் விஷயத்தை கண்டுபிடித்து, அதில் உங்களுடைய திறமைகளைப் பட்டை தீட்டி, பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் அதில் உருவாக்கி கொள்ளுங்கள்.

உண்மையிலேயே அந்த ஒரு செயலை செய்வது மூலமாக நீங்கள் குறைவாகப் பணம் ஈட்ட நேர்ந்தாலும், திருப்தியை உணர்வீர்கள். அதுவே உங்கள் வாழ்க்கையின் அர்த்தம்.

2. வாழ்க்கையின் விதிகளை உடைப்பது.

வாழ்க்கையின் விதிகளை உடைப்பது இங்கே பெரும்பாலானவர்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கலாம். நம்மில் பலரும் பிறர் என்ன செய்கிறார்களோ அதையே செய்ய தான் விரும்புவோம்.

மீறி வித்தியாசமாக ஏதேனும் செய்தால் யாராவது தவறாகப் பேசுவார்கள் என்பதற்கு பயந்தே நமக்குள் ஏதேனும் மாற்று யோசனை இருந்தாலும் அதை செயல்படுத்தாமலேயே இருந்து விடுவோம். விதிகளை உடைத்து தைரியமாக நீங்கள் முயற்சிக்கும் விஷயமானது உங்களுக்கு வாழ்க்கையின் வேறு கோணத்தை தெரியப்படுத்த வாய்ப்புள்ளது.

அதில் ஏதேனும் தவறு நேர்ந்தாலும், நம்மால் முயற்சியாவது செய்ய முடிந்ததே என்ற திருப்தி கிடைக்கும். எனவே நீங்கள் விரும்பும் விஷயத்தை பிறருக்காக பயந்து செய்யாமல் இருந்து விடாதீர்கள். அந்த ஒரு தைரியமான செயலானது உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவுக்கு பலம் மிக்கதாக இருக்கலாம்.

3. பணத்தைப் பற்றிப் புரிந்துகொள்வது.

பணத்தைப் பற்றி புரிந்து கொள்வது, என்றதும் வேலைக்கு செல்ல வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் இதில் என்ன புரிந்து கொள்ள இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் சம்பாதிக்கும் பணத்தை வெறும் சேமிப்பு, செலவு மட்டுமே செய்ய நினைப்பது சரியான யோசனையாக இருக்காது.

முதலீடு என்ற ஒன்றைப் பற்றி நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். பணத்தை எதில் முதலீடு செய்வது அந்த முதலீடானது எதிர்காலத்தில் எனக்கு எப்படி பயன்படும் என்று சிந்தித்து செயல்படுதல், பணத்தைக் கொண்டு பணத்தை சம்பாதிக்கும் வித்தையை நமக்கு கற்றுத் தரும்.

4. என்னுடைய செலவை கண்காணிப்பது.

நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோமோ, அதைவிட முக்கியம் அதை எப்படி செலவு செய்கிறோம் என்பதை கண்காணிப்பதில் இருத்தல் வேண்டும். ஒரே இரவில் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழந்த நபர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

நீங்கள் செய்யும் செலவானது ஞாயமான செலவாக இருக்கிறதா அல்லது தேவை இல்லாமல் வீண் செலவு செய்கிறோமா என்பதை கண்காணியுங்கள். செலவு செய்தாலும் அதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தை கருத்தில்கொண்டு செலவு செய்வது நல்லது.

பத்தாயிரம் ரூபாய் திறன் பேசியே என்னுடைய பயன்பாட்டுக்கு போதும் என்றால், ஒரு லட்ச ரூபாய் ஐபோன் எனக்குத் தேவை இல்லாத ஒன்று. இதுவே ஏதேனும் ஓர் திறனை வளர்த்துக்கொள்ள நான் 50 ஆயிரம் செலவு செய்கிறேன் என்றால், அதைக் கொண்டு எதிர்காலத்தில் என்னால் நல்ல நிலையை அடைய முடியும் என்றால், அந்த செலவு நியாயமானது. எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைவிட எதற்காக செலவு செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.

5. பிறரோடு ஒப்பீடு செய்யாமல் இருப்பது.

இந்த ஒரு விஷயம் தான் நம்முடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிறது. நாம் அனைவரும் நம்முடைய செயல்களை சிறப்பாக செய்து கொண்டு, நாம் மகிழ்ச்சியாக இருப்பதன் மீது மட்டும் கவனம் கொண்டிருந்தால் யாருக்கும் எந்த தொல்லையும் இல்லை. அனைவருமே இங்கே மகிழ்ச்சியாக இருக்கலாம்.

ஆனால் நம்முடைய எண்ணங்கள் எப்பொழுதுமே நம்மிடம் இருக்கும் விஷயங்களை விட இல்லாத விஷயங்களை நினைத்து கவலைப்பட வைக்கின்றது. இதுவே நம்மிடம் எவ்வளவு இருந்தாலும் நிம்மதியற்ற வாழ்க்கையை உணர்வதற்கு வித்தாக அமைகிறது.

நாம் யாரிடமும் போட்டிபோட்டு மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய திறனுக்கேற்ற அனைத்தும் நம்மை கட்டாயம் வந்து சேரும்.

6. எனக்கு முக்கியத்துவம் தருவது.

எங்க பெரும்பாலானவர்கள் தனக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றி சிந்திப்பதே கிடையாது. குடும்பம் குடும்பம் என்று ஓடுபவர்களையே நான் பார்த்திருக்கிறேன். அது தவறில்லை என்றாலும், தன் தனித்திறன்களின் மீதும் மகிழ்ச்சியின் மீதும் கவனம் செலுத்தாமல், பிறருக்காக ஏதோ ஒரு திசையில் பயணிப்பவர்கள் இறுதியில் ஏமாற்றத்தையே அடைகிறார்கள் எனலாம்.

ஒரு கட்டத்திற்கு மேல் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் நாம் இவ்வளவு விஷயத்தை முயற்சிக்காமல் இழந்து விட்டோமே என்று உணர்பவர்கள் ஏராளம். எனவே உங்களுடைய மகிழ்ச்சியும் முக்கியம் உங்களுடைய மகிழ்ச்சியில் தான் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை உணர்ந்து, சமநிலையில் பயணிக்க முயலுங்கள்.

7. எதற்கும் தயங்காமல் இருப்பது.

பெரும்பாலும் வெற்றி என்பது பணம் சம்பாதிக்கும் திறனை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை நாம் அனைத்து விஷயத்திற்கும் தைரியமாக இருப்பதே மிகப் பெரிய வெற்றிதான்.

தைரியம் தான் ஒருவனை வாழ்க்கையில் முன்னோக்கி நகர்த்திச் செல்லும். தைரியமின்மை பிறர்மீது பழி சொல்லி எதையும் முயற்சிக்காத இதன் காரணத்தை கூறி புலம்பும் நிலையிலேயே வைத்திருக்கும். என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பக்குவம் ஒவ்வொருவருக்கும் இங்கே இருத்தல் வேண்டும்.

கிடைத்தது ஒரு வாழ்க்கை. முடிந்த அளவுக்கு நீங்கள் விரும்பியது போல் வாழ்ந்து பாருங்கள். 

Leave a Reply

Your email address will not be published.

Previous post எந்த விஷயம் உங்களை வியக்க வைக்கிறது? (Tamil Motivation)
Next post 21/02/2022- Website Launch Day