How to Become Successful in Life (Tamil)

How to  Become Successful in Life

வெற்றி! வெற்றி! வெற்றி!

அனைவருக்குமே தன் வாழ்வில் இதை ஒரு முறையாவது ருசித்து விட வேண்டுமென்று ஆசை. ஒவ்வொரு மனிதனுக்கும் வெற்றியுடைய வரையறை வித விதமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருந்து விடுகிறது. 

இந்த பதிவில் எப்படி ஒரு இலக்கை அடைவது என்பதற்கான சரியான விளக்கத்தைப் பார்க்கலாம். பதிவை முழுமையாகப் படியுங்கள். 

1. முதலில் அறிந்து கொள்ளுங்கள்:- 

எந்த ஒரு விஷயத்தை நாம் தொடங்குவதாக இருந்தாலும், அதைப் பற்றிய புரிதல் மற்றும் தெளிவு மிக மிக அவசியம். தீயினுடைய தன்மை சுடும் என்பதை நாம் அறிந்தால் தான், அதை எங்கே பயன்படுத்தலாம் அல்லது எப்படி அதன் ஆபத்திலிருந்து விலகி இருக்கலாம் என்பது பற்றிய சிந்தனை நமக்குள் ஏற்படும். எனவே எதுவாக இருந்தாலும் அதை பற்றிய அடிப்படை அறிவு முதன்மையானது. இது இல்லாமல் நாம் எதையுமே சரியாகச் செய்ய முடியாது. 

சரி, எப்படி நான் ஒரு விஷயத்தைப் பற்றி அறிவது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். தற்போதுள்ள இணைய உலகில் அது மிக மிக எளிமையான ஒன்று. என்னைக் கேட்டால் யூடியூப் வழியாகவே சகலத்தையும் உங்களால் அறிந்துகொள்ள முடியும். ஒரு விஷயத்தைப் பற்றி அறிவதையும் மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள்.

  • வாசித்தல் (Read):- எலான் மஸ்க், வாரன் பஃபெட், பில்கேட்ஸ் போன்ற தலைசிறந்த நபர்களை எடுத்துக்கொண்டால், வாசித்தல் என்பது அவர்கள் வாழ்க்கையை பெரும்பாலும் ஆட்கொண்டிருக்கும். வாசித்தல் மூலமாகவே அந்த அளவுக்கு அறிவுத்திறனை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. நீங்களும் எதையாவது கற்க வேண்டும் என்றால் அது சார்ந்த புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். அதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளும் அடிப்படை விஷயங்கள் கூட உங்களுக்கு மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம். 
  • கவனித்தல்(Listen):- பிறர் சொல்வதை கவனித்தல் மூலமாகவும் நாம் அறியாத பல விஷயங்களை நம்மால் அறிய முடியும். இதுவும் ஒருவகையான கற்றல் முறை தான். உலகில் உள்ள அனைவருக்குமே அனைத்தும் தெரிந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒன்று கட்டாயம் தெரிந்திருக்கும். அது பல சமயங்களில் நமக்கு தெரியாத ஒன்றாகவும் இருக்கலாம். நாம் அனுபவிக்காத புதிய அனுபவமாகவும் இருக்கலாம். எனவே பிறரை கவனிப்பதன் மூலமாகவும் நம்முடைய கற்றல் திறன் மேம்படுகிறது. 
  • உள்வாங்குதல் (Observe):- நாம் அனைவருமே படிக்க முடியும். பிறர் சொல்வதைக் கவனிக்க முடியும். ஆனால் அதை எத்தனை பேர் உள்வாங்குகிறோம் என்பதில் மிகப் பெரிய கேள்விக்குறி உள்ளது. பெரும்பாலான மனிதர்கள், தான் எதை எதிர்பார்க்கிறார்களோ/விரும்புகிறார்ளோ அதையே உள்வாங்குகிறார்கள் என்று உளவியல் சொல்கிறது. முதலில் எதை நீங்கள் சாதிக்க வேண்டுமென நினைத்தாலும் அதை உங்களுக்கு விருப்பத்திற்குரிய ஒன்றாக மாற்றுங்கள். 

“நமக்குப் பிடிக்காத விஷயத்தில் ஒரு போதும் நம்மால் சாதிக்க முடியாது”. 

2. வேலை செய்:-

நாம் செய்ய நினைக்கும் அனைத்து விஷயங்களும் நம் எண்ணங்களில் மட்டுமே இருந்தால் போதாது. அதற்காக நாம் எடுத்துவைக்கும் முதல் அடி தான், அது நம்மை எங்கே கொண்டு செல்லப் போகிறது என்பதை நிர்ணயம் செய்கிறது. ஆயிரம் பேர் ஆயிரம் விஷயங்களை நான் இது செய்வேன் அது செய்வேன் என்று கூறிவிட முடியும். ஆனால் உண்மையில் செயல் என்ற ஒன்றில் யார் இறங்குகிறார்களோ, அவர்களே தன் இலக்குகளை சிறுகச் சிறுக நெருங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

“நாம் கற்கும் பல ஆயிரம் விஷயங்கள் நம் மூளையில் வெறும் தரவுகளாக மட்டுமே இருப்பதால் என்ன பயன்?. அதைப் பயன்படுத்தி ஒரு விஷயத்திற்கு செயல்வடிவம் கொடுப்பவர்களே உண்மையான திறமைசாலிகள்”. 

3. நடைமுறையை மாற்ற முயலாதே:-

எடுத்தவுடனேயே நம்முடைய வாழ்க்கையை மிகச் சிறப்பாக மாற்றிவிட முடியாது. இந்த சமூகத்திற்கு என்று ஒரு கோட்பாடு இருக்கிறது. அதை உடனடியாக உடைத்து வித்தியாசமாக மாற வேண்டும் என நினைத்தால் அது நமக்கு காயத்தையே ஏற்படுத்தும். சுற்றியிருக்கும் பெரும்பாலானவர்கள் ஒரு விஷயத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்க, நீங்கள் மட்டும் ஏதோ ஒன்றை வித்தியாசமாக செய்துகொண்டிருந்தால் உங்களை ஒரு மாதிரி தான் பார்ப்பார்கள். 

கூட்டத்தில் இருந்துகொண்டே, தனி ஒருவனாக முயற்சி செய்வதே புத்திசாலித்தனம். எதுவும் உடனடியாக வாழ்க்கையில் மாறிவிடாது, அதற்கான கால நேரமும், தொடர் உழைப்பும் முக்கியம் என்பதை நம்புங்கள். ஒரு மாதத்தில் இந்த விஷயம் எவ்வளவு நன்மையைக் கொடுக்கிறது என்பதை கணிப்பதற்கு பதிலாக, பத்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று ஒருமுறை சிந்தியுங்கள். 

“இதுதான் உங்களுக்குள் மன அழுத்தமற்ற முன்னேற்றத்திற்கான வழியை வகுக்கும்.”

உங்களால், ஒருபோதும் சமூகத்தை எதிர்த்துக் கொண்டு வாழ்க்கையின் வித்யாசமான இலக்கை அடைய நினைப்பது சற்று கடினம். 

அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு எதைப்பற்றியும் விளங்க வைக்காமல் உங்கள் செயலில் கவனம் கொள்வது நல்லது. நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று, பிறர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, நம் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும் என்ற, எந்த அவசியமும் கிடையாது. நம்முடைய இலக்கு சரியாக இருந்தால் அதுவே போதும். 

மேற்கூறிய அனைத்தும் அனைத்திற்கும் பொருந்தும் என நினைக்கிறேன். இனி இதை நடைமுறைப்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

Previous post 21/02/2022- Website Launch Day