Important Life lesson Should Everyone Know in 2022.

  • நாம் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும், அதில் நாம் நிறைவாய் உணர்ந்தால், யார் சொல்லையும் காதுகொடுத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை…

இந்த ஒரு விஷயத்தை பல தருணங்களில் நான் என் வாழ்வில் அனுபவித்துள்ளேன். குறிப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில்.

நான் சென்ற இடமெல்லாம் திசைத்திருப்பல்களை அதிகமாக அனுபவித்தவன். பெரும்பாலானவர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட வட்டத்தினுள் அடைபட்டு, அதைச் சுற்றியே தன் வாழ்க்கையையும், சிந்தனையையும் அமைத்துக்கொள்ள முற்படுகிறார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களும் அவ்வாரே இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

எனக்கு இந்த முன்னோர்கள், மூத்தோர்கள், வாழையடி வாழையாக, இதுதான் வாழ்க்கை, இதுதான் மகிழ்ச்சி, இப்படி செய்தால் தான் சரியாக இருக்கும் என்று ஓர் வரையறுக்கப்பட்ட விஷயங்களை பின்பற்றுவதன் மேல் நம்பிக்கை இல்லை…

இவ்வுலகில் எதுவாக இருந்தாலும், நாம் முழுமனதோடு விருப்பப்பட்டு அதில் கவனத்தைச் செலுத்தி முயற்சித்தால், நிச்சயமாக நம் முன்னேற்றத்திற்கு உண்டான ஏதோ ஒன்று அதன் மூலம் பெற முடியும்…

உண்மையைச் சொல்லப்போனால் இது எனக்குப் Workout ஆகியும் உள்ளது. முழுக்க முழுக்க எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நம்முடைய பங்களிப்பைப் பொறுத்து தான் நம் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் பிறருடைய கருத்துகளைக்கேட்டு நம் வாழ்க்கைக்கான முடிவுகளை எடுப்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை.

எனது மகிழ்ச்சியை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.

எனது தேவையை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.

நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்.

என்னுடைய சம்பாத்தியத்தை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.

எனது துணை,

எனது குழந்தை,

எனது காலை,

எனது மாலை,

எனது ஆரோக்கியம்,

என, என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்தையும் நானே தீர்மானிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதுவென்றால், நான் எந்த அளவுக்கு ஒரு விஷயத்தில் முழு ஈடுபாட்டோடு முயற்சிக்கிறேன் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

இதில் எந்த முன்னோர்களின் கூற்றோ, அதிகாலையில் எழுதலோ, எலான் மஸ்க்-ன் தந்திரமோ, கோரா நபர்களின் வழிகாட்டுதலோ, பக்கத்து வீட்டு IAS மாமாவின் Strategyயோ இல்லை இந்த கிரி கணபதியின் சுயமுன்னேற்றப் பதிவுகளோ, காணொளிகளோ உங்கள் வாழ்க்கையை அப்படியே அலேக்காக கொண்டுபோய் அந்தரத்தில் வைக்கப்போவது கிடையாது.

எதுவாக இருந்தாலும் நீங்கள் தேர்வு செய்வது எதுவோ, அதுவே உங்களுடைய வாழ்க்கையாக அமைகிறது என்பதை உணருங்கள்.

பலருடைய வாழ்க்கை முறையைப் பார்த்து நமக்கு ஏக்கமாக இருக்கலாம், பொறாமையாக இருக்கலாம், சங்கடமாக இருக்கலாம், நம் வாழ்க்கையின் மீது நமக்கே வெறுப்பாகவும் இருக்கலாம்.

ஆனால் நீங்கள் சம்பாதிக்கும் 8000மோ 10000மோ உங்கள் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருந்து, உங்களுக்குத் திருப்தியை ஏற்படுத்துமேயானால், அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சி.

  1. ஒன்று, உங்களுடைய சம்பாத்தியத்திற்கு ஏற்றவாறு உங்கள் தேவைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
  2. அல்லது அதிகமாய் சம்பாதிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.

தேவையில்லாமல் பிறருடைய ஒரு லட்சம் சம்பளம், 10 லட்சம் கார், வீடு, பங்களா என்பதைப் பார்த்து, ஏக்கம் கொண்டு, நிம்மதியை இழந்து விடாதீர்கள். இவை அனைத்தையும் ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சி தான் உங்களிடம் இருக்க வேண்டுமே தவிர, அவற்றைப் பார்த்து ஏக்கமோ, பொறாமையோ மன அழுத்தம் கொள்ளுதலோ நிச்சயம் அதை உங்களால் அடைய முடியாத தூரத்திற்கு கொண்டுபோய்விடும்.

இதை எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும்…

“இங்கே யாருடைய அறிவுரைகளும் நமக்குத் தேவையில்லை. நாம் நம் வாழ்க்கையின் பயனை உணர்ந்த பிறகு”

வாழ்க்கையை உங்களுக்குப் பிடித்த திசையில் ஓட்டிச் செல்லுங்கள். என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியத்துடன்.

Leave a Reply

Your email address will not be published.

Previous post Hello world!
Next post எந்த விஷயம் உங்களை வியக்க வைக்கிறது? (Tamil Motivation)